Wednesday, 3 October 2018

உலக மனநல நாள் அக்டோபர் 10 - 2018


                         "இளைய தலைமுறையினரின் மனநலம் காப்பது -அவசரத் தேவை"


அறிமுகம்:

                              சிறார்களின் சிதறிவரும் மன நலத்தை சீர்படுத்தி அவர்களுக்கு சிறந்த வழிகளைக் காட்டி, கல்வி பெற்று பணிக்குச் சேரும் வரை, நாமும் சேர்ந்து நடந்து செல்வது தான் தற்போது மிகவும் முக்கியம். குழந்தைகளின் மன நல பாதிப்புகளை கண்டறிந்து காப்பது அவசரத் தேவைதானே! உலக அளவில் 10-20% குழந்தைகளுக்கு மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கு மனநல பாதிப்புகள் உள்ளதாம்! வயது வந்தவர்களில் நால்வரில் ஒருவருக்கும் குழந்தைகளில் பத்து பேரில் ஒருவருக்கும் மனநல பாதிப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றது. மனநல பாதிப்புகள் உள்ளவர்களில் 90 சதவீதத்தினருக்கு 14 வயதிற்குள் அறிகுறிகள் தோன்றுகின்றன. அதாவது சில குழந்தைகள் பாதிப்புகளுடனேயே வளர்கின்றனர்.
மனநல பாதிப்புகளுக்கான பல மறைமுகமான அறிகுறிகளை பெற்றோர், நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் உணர்வதில்லை. குழந்தைகளின் தினசரி நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வந்தால் மட்டுமே இவற்றைக் கண்டறிய முடியும்! அப்போது தான் உடனடியாக தகுந்த மருத்துவரை அணுகி உதவி பெறலாம்! “நல்வாழ்வு (Health)  என்பது உடல், மனம் மற்றும் சமுதாய நலமும் சேர்ந்தது, நோய்கள் இன்றி இருப்பது மட்டுமல்ல என்று உலகசுகாதார நிறுவனம் (WHO) உறுதியுடன் வரையறுத்திருக்கிறது.

குழந்தைகளுக்கான உரிமை:


                        ‘‘குழந்தைகளுக்கான உரிமைஎன்ற முக்கியமான கோட்பாட்டினை ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருக்கிறது. அதன்படி ஒவ்வொரு குழந்தைக்கும் நல்வாழ்வு பெற, கல்வி பெற, தனக்குரிய மதிப்பு மற்றும் கௌரவத்துடன் (Dignity) வாழ உரிமை உண்டு! இதில் ஏதாவது மாறி நடந்தால் அது மனித உரிமை மீறல் மட்டுமல்ல. உலகளாவிய குழந்தைகள் உரிமை மீறலும் ஆகும்! மன நல பாதிப்புகள் உள்ள ஒவ்வொரு சிறார்க்கும் கல்வி, சம வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே!

தகவல் தொழில்நுட்பத்தின் தாக்கம்:


                   வானமே எல்லையாக தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து உலகமே சிறு கிராமமாக இயங்குகிறது. பெருகிவரும் மக்கட்தொகை, தேவையான கல்வியும் வேலை வாய்ப்பும் பெற மிகப்பெரிய போட்டி, ஒவ்வொரு நிலையிலும் பெருகிவரும் எதிர்ப்பார்ப்புகள் (தனக்குள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து) மேலும் இரட்டை முனை கத்திகளாக சமூக ஊடகங்கள் என்பன பல சிறார்களின் மனதில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. தான், தனக்குரிய இடம் என்று Identify Crisis-ல் இயற்கையாகவே கொதித்துக் கொண்டிருக்கும் (Adolescent Turmoil)  வளர் இளம் பருவத்தினருக்கு இந்த தாக்கங்கள் எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுவதுபோல் ஆகிறது.
சிறார்களுக்கு உணர்வுகளும், எண்ணங்களும் உடல் வளர்வதுபோல் வளர்ந்து வருகின்றன. மன அழுத்தங்கள் இவர்களை எளிதில் பாதித்துவிடும். சரியான சிகிச்சை முறைகளால் எளிதில் சரி செய்து சீர்ப்படுத்திவிடவும் முடியும். எனவே மறைமுகமான அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிவது மிகவும் முக்கியம்.

அறிகுறிகள்:


                    கோபம், மனச் சோர்வு, பட படப்பு, பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லாமல் இருப்பது, கவனமின்மை, மற்றவர்களிடமிருந்து ஒதுங்கி இருத்தல், காரணமில்லாமல் தலைவலி, வயிற்றுவலி போன்றவை குழந்தைகளிடம் காணப்படலாம்.
வளர் இளம் பருவத்தினரிடம் படபடப்பு, மனச்சோர்வு, மிகவும் அதிகமாக அல்லது மிகவும் குறைவாக சாப்பிடுவது, அதிக தூக்கம், தூக்கமின்மை, ஆபத்தான செயல்களில் இறங்குவது, மிக வேகமாக மோட்டார் வாகனங்களை ஓட்டுதல், பாலியல் உணர்வுகளால் உந்தப்படுதல், சிகரெட், புகையிலை போதைப் பொருட்கள் மது ஆகியவற்றை பழக்கப்படுத்திக் கொள்வது போன்றவை காணப்படலாம்.
சிறு ஏமாற்றங்களைக் கூட தாங்க முடியாமல் தவிப்பதும் மன நல பாதிப்பின் ஒரு வெளிப்பாடுதான்! இதனால் தற்கொலை முயற்சியில் இவர்கள் ஈடுபடலாம். இளம் வயதினர் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்களை ஆராய்ந்ததில் 90 சதவீதத்தினருக்கு மன நல பாதிப்புகள் இருந்தது தெரிய வந்துள்ளது.

காரணங்கள்:

                  சில மன நல பாதிப்புகள் (2-ம் Attention Deficit Hyperactive Disorder – ADHD, Bipolar Disorderபோன்றவை) மரபு வழி நோயாக இருக்கலாம் என்று அறிவியல் குறிப்பிடுகிறது. பெற்றோர்களில் ஒருவருக்கு இந்த நோய்கள் இருந்தால்கூட சிறு வயதிலேயே குழந்தைளுக்கும் தோன்றக்கூடும்.
குடும்பத்தில் சண்டை, மன முறிவுகள், ஒரு பெற்றோரால் அல்லது பெற்றோர்கள் இல்லாமல் வளர்க்கப்படும் குழந்தைகள், ஏழ்மை, பெற்றோர் அல்லது உடன் பிறந்தோரின் இறப்பு ஆகியவை சிறார்களுக்கு மனநில பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
இத்துடன் சேர்ந்து நட்பு முறிவு, காதல் தோல்வி, கல்வி வேலை வாய்ப்புகளில் தோல்வி ஆகியவை வளர் இளம் பருவத்தினருக்கு மனச்சிதைவை ஏற்படுத்தலாம்.
இயற்கை பேரிடர்களான கடல் சீற்றம், பூகம்பம், தீ விபத்து போன்றவை மற்றும் போர், வன்முறைக் கலவரங்கள் போன்றவையும் மன நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
மன நல பாதிப்புகள் வளர் இளம் பெண்களை அதிகம் பாதிக்கிறது என்று அறியப்பட்டுள்ளது. இரு பாலருக்கும் கொலை, கொள்ளை, சண்டை போன்ற வெளிப்புற (Exteranalisation) நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறைந்து தற்போது தன்னுள்ளேயே உறைந்து (Internalisation) மனச்சோர்வு, தற்கொலை எண்ணங்கள் என்று வெளிப்படுகிறதாம்.
இந்தியாவின் வருங்கால தூண்களான குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினரை பாதுகாப்பது நம் அனைவருடைய கடமை!

என்ன செய்யலாம்?

1) இளம் வயதினருக்கு ஏற்படும் மனநல பாதிப்புகளைப் பற்றி அனைவருக்கும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.
2) பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் குழந்தைகளின் மன நல பாதிப்புகளை கண்டறிந்து சிகிச்சை அளிப்பது பற்றி கருத்தரங்கள் நடத்த வேண்டும். குறிப்பாக மன நல பாதிப்புகளை ஆரம்ப நிலையில் கண்டறிவது எப்படி என்பதை அறிவுறுத்தவேண்டும்.
3) சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவர்கள் மருத்துவ உதவியாளர்களுக்கு குழந்தைகள் மன நல பாதிப்பு சிகிச்சை குறைகள் பற்றிய பயிற்சிகள் அளிக்கப்படவேண்டும்.
4) தொலை தொடர்பு சாதனங்கள், விளம்பரங்கள் மூலம் சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் செய்திகளை பரப்பவேண்டும்.
5) அனைத்து சுகாதார சிகிச்சை மையத்திலும் இளையவர்களின் மன நல பாதிப்புகளை கண்டறியவும் வசதிகளும் சிகிச்சையும் கிடைக்க அரசு ஏற்பாடு செய்யவேண்டும். மேல் சிகிச்சை மையங்களும் சிறப்பு மருத்துவர்கள் சேவையும் இளம் சிறார்களுக்கு கிடைக்க போதிய நிதியுடன் மையங்களை ஏற்படுத்தித் தரவேண்டும்.
இளம் வயதினரின் மன நலம் காப்பதை கடமையாக, தற்போதைய முன்னுரிமையாக எடுத்துக்கொண்டு அனைவரும் செயல்படவேண்டும். குழந்தைகளை நல்ல முறையில் பராமரித்து அவர்கள் மன நலத்தைப் பேணி வளர்த்தால் அவர்கள் இளம் பருவத்தில் நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் கல்வி புரிய, வேலை வாய்ப்பு பெற்று நல்ல குடிமகனாக வீட்டிற்கும் நாட்டிற்கும் உரிய பங்கினை அளிப்பார்கள் என்பதில் ஐயமில்லை!

கேள்வி பதில்கள்:

இளைஞர்களுக்கு உண்டாகும் மனவழுத்த அறிகுறிகள் எவை?
கல்வி சாதனைகளில் வீழ்ச்சி
நட்புறவில் நடத்தைப் பிரச்சினைகள்
குடும்பத்தோடும் பிறரோடும் கூடி ஒழுகாமை
உற்சாகமும் உத்வேகமும் இழத்தல்.
சுய ஊக்குவிப்பில் சிரமம்
தேவையற்ற முரட்டுத்தனம், கோபம், வெறி
வருத்தம் மற்றும் இயலாமை உணர்வுகளை வெளிப்படுத்தல்
விமரிசனங்களைத் தாங்கிக்கொள்ளமுடியாமை
பெற்றோரின் எதிர்பார்ப்புக்கு இணங்க வாழமுடியாமை
சுயகௌரவக் குறைவும் குற்ற உணர்வில் வருந்துதலும்

இளைஞர்களில் உடல் ரீதியிலான மாற்றங்கள் ஏன் நிகழ்கிறது?
10 லிருந்து 19 வயது வரை (WHO அளவுகோலின் படி) ஓர் இளைஞரின் உடல் தீவிர மாறுதலை அடைகிறது. பருவ காலத்திற்குள் நுழைவதால் இளைஞர்கள் உடல் மாற்றங்களையும் உணர்வு மாற்றங்களையும் அனுபவிக்கிறார்கள். இதனால் உடல் வடிவ மாறுதலோடு ஆளுமையும் நடத்தையும் தீவிரமாக மாறுகிறது. இதற்கு ஒரு பாதி காரணம் பாலுணர்வு பற்றிய அறிதலே. இது மாதவிடாயினாலும் பிற உடல் மாற்றத்தாலும் ஏற்படுபவை. இன்னொரு பாதி காரணம் இயக்குநீர்கள் அதிகமாகச் சுரப்பதால் மனநிலையில் அவை பாதிப்பை ஏற்படுத்துகின்றன.No comments:

Post a Comment